
இந்தோனேசியா, செப்டம்பர் 14 – பாலி அருகே நுசா பெனிடா (Nusa Penida) தீவிலுள்ள கெலிங்கிங் (Kelingking) கடற்கரையில் 80 மீட்டர் உயரமுள்ள பாறையிலிருந்து விழுந்து 29 வயதான ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை காலை 9 மணியளவில், அப்பெண் பாறையின் விளிம்பை நோக்கிச் சென்றபோது வழுக்கி பள்ளத்தாக்கில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. மீட்புப் படையினர் சென்றபோது அவர் பலத்த காயங்களால் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
கடல் அலைகள் அதிகமாக இருந்ததால் படகு மூலம் உடலை மீட்க முடியவில்லை. இதையடுத்து, மீட்புப் படையினர் சுமார் ஒன்றரை மணி நேரம் குறுகிய படிக்கட்டுகள் வழியாக உடலை மேலே கொண்டு வந்தனர். சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலிய அரசு அவரது குடும்பத்தினருக்கு உதவி வழங்கி வருகிறது.



