
பினாங்கில் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு நேர்மை மற்றும் நிதி நிர்வாக தொடர்பான விளக்கவுரை – பினாங்கு MACC
பினாங்கு, பிப்ரவரி 12 –
பினாங்கு மாநிலத்தின் ஊழல் தடுப்பு ஆணையமான MACC, மாநிலம் முழுவதிலுமுள்ள 28 தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, நேர்மை மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான சிறப்பு விளக்கவுரை பட்டறையை லாடாங் வால்டோர் தமிழ்ப்பள்ளியில் நடத்தியது.
இதில், MACC சட்டங்கள் தொடர்பான கருத்துக்களைத் தெளிவாக எடுத்துரைத்தனர். குறிப்பாக, போலித் தொகை கோரிக்கைகள் செய்வது மற்றும் பதவி அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி லஞ்சம் பெறுவது ஆகியவை கடுமையான குற்றங்களாகும் என விளக்கப்பட்டது.
இந்த விளக்கவுரையை பினாங்கு MACC இயக்குநர் டத்தோ TPj கருணாநிதி சுப்பையா (Datuk TPj Karunanithy a/l Y. Subbiah) பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கினார். பள்ளி நிர்வாகத்தில் சட்ட விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் அவசியம் என்பதையும், எந்தவொரு நிதி பரிவர்த்தனையும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் (PIBG), பள்ளி மேலாண்மை வாரியம் (LPS) மற்றும் பள்ளி நிர்வாகம் தொடர்பான நிதி கணக்குகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து வழிகாட்டப்பட்டது. ஒவ்வொரு ஒதுக்கீடு, நன்கொடை மற்றும் செலவீனமும் சரியாக பதிவு செய்யப்பட்டு, பரிசோதனை செய்து, விதிமுறைகளுக்கு இணங்க அறிக்கையிடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் செபராங் பிறை தெற்கு கல்வி மாவட்ட அலுவலக உதவி அதிகாரி முகமட் ஷாபி பின் மாட் ஜூனுஸ் (Mohd Shafie bin Mat Junus), லாடாங் வால்டோர் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கோகிலாவாணி சண்முகம், MACC செபராங் பிறை கிளை துணைத் தலைவர் அஸ்மாவதி பிந்தி அகமட் (Asmawati binti Ahmad) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



