Latestஉலகம்

பிரான்சில் அதிர்ச்சி: 2024 முதல் வேனில் பூட்டப்பட்ட 9 வயது சிறுவன் மீட்பு

பாரீஸ், ஏப்ரல்-12-பிரான்ஸில், 9 வயது சிறுவன் ஒருவன் 2024-ஆம் ஆண்டிலிருந்து தனது தந்தையால் வேனில் பூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேனிலிருந்து ஏதோ சத்தம் வருவதாகக் கூறி அண்டை வீட்டார் கொடுத்த தகவலின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, அச்சிறுவன் மிகவும் மோசமான நிலையில், ஊட்டச்சத்து குறைவுடனும் நகர முடியாத நிலையிலும் மீட்கப்பட்டான்.

நீண்ட காலமாக ஒரே இடத்தில் அடைக்கப்பட்டிருந்ததால் நடக்க முடியாத நிலைக்கு அவன் தள்ளப்பட்டதாக போலீஸ் கூறியது.

இதையடுத்து அவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

சிறுவனின் தந்தை கைதுச் செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அப்போது 7 வயதான மகனை மனநல மருத்துவமனைக்கு அனுப்புவதில் தனது காதலி குறியாக இருந்ததாகவும், அப்பெண்ணிடமிருந்து ‘பாதுகாக்கவே’ மகனை வேனில் அடைத்து வைத்ததாகவும் தந்தை தொடக்கக் கட்ட விசாரணையில் கூறியுள்ளார்.

எனினும், 2024-ல் திடீரென ‘காணாமல் போகும்’ வரை, அச்சிறுவனுக்கு மனநலப் பிரச்சனை இருந்ததாக எந்தவொரு மருத்துவப் பதிவுகளும் இல்லையென்பதோடு, பள்ளியில் அவன் கெட்டிக் காரன் எனவும் கண்டறியப்பட்டதை அதிகாரிகள் சுட்டிக் காட்டினர்.

குழந்தையைக் கடத்தி அடைத்து வைத்தது, பராமரிப்பில் அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவ்வாடவரின் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவரின் மகன் வேனில் அடைக்கப்பட்ட விஷயம் தமக்குத் தெரியவே தெரியாது என அவரின் காதலி கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!