
கோலாலம்பூர், ஏப்ரல்-17-குழந்தைகள் பிறந்த கையோடு அவர்களை உடனடியாக பதிவுச் செய்ய வேண்டும் என, உள்துறை அமைச்சான KDN பெற்றோர்களை அறிவுறுத்தியுள்ளது.
தாமதமான பிறப்புப் பதிவுகள் குறைந்து வந்தாலும், இன்னும் ஆயிரக்கணக்கான சம்பவங்கள் ஆண்டுதோறும் பதிவாகி வருவதாக அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
சராசரியாக, ஒவ்வொரு மாதமும் சுமார் ஆயிரம் குழந்தைகளின் பிறப்பு பதிவு குறிப்பிட்ட காலவரையறைக்குள் செய்யப்படாமல் இருப்பது கவலையளிப்பதாக அவர் சொன்னார்.
நடப்புச் சட்டத்தின் படி, தீபகற்பத்தில் 60 நாட்களுக்குள்ளும், சபா, சரவாக் மாநிலங்களில் 40 நாட்களுக்குள்ளும் பிறப்புகள் பதிவுச் செய்யப்பட வேண்டும்.
குழந்தைம் பிறப்புகளைப் பதிவுச் செய்யாமல் தாமதிப்பது, குழந்தைகள் கல்வி, சுகாதாரம் மற்றும் அரசாங்க உதவிகளை பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும் என அமைச்சர் எச்சரித்தார்.
பதிவுத் தாமதப் பிரச்சனைக்கு, முறைப்படி பதிவுச் செய்யாத திருமணங்கள் மற்றும் சமூக பிரச்சனைகள் காரணமாக உள்ளன என்றும் சைஃபுடின் கூறினார்.
எனவே, ஒவ்வொரு குழந்தைக்கும் உரிய ஆவணங்கள் கிடைக்க, பெற்றோர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.



