பிலிப்பின்ஸுக்கு டீசல் விநியோகம்: பொய்ச் செய்தி பரப்பிய நபர் மீது MCMC விசாரணை

புத்ராஜெயா, ஏப்ரல்-18,
பிலிப்பின்ஸ் நாட்டுக்கு மலேசியா டீசல் விநியோகம் செய்ததாகப் பரப்பப்பட்ட பொய்ச் செய்தி தொடர்பாக, ஓர் ஆடவர் மீது மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விசாரணைக்கு உதவ, சம்பந்தப்பட்ட நபர் கடந்த வெள்ளிக்கிழமை வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டார்.
பொய்ச் செய்தியைப் பதிவேற்றப் பயன்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த விசாரணை 1998-ஆம் ஆண்டு MCMC சட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 500,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பொது மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையிலான பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என MCMC எச்சரித்துள்ளது.
இந்த விவகாரத்தில் பிலிப்பின்ஸுக்கு அனுப்பப்பட்ட டீசல் உண்மையில் Vitol என்ற வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும், அது பெட்ரோனாஸ் அல்லது மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமானது அல்ல என்றும் அதிகாரிகள் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



