
ஆயர் கெரோ, செப்-25-Patri Wawasan Negara தலைவர் டான் ஸ்ரீ ராய்ஸ் யாத்திம், தம் மீது சுமத்தப்பட்ட தேச நிந்தனைக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். நெகிரி செம்பிலானின் புதிய Yang Dipertuan Besar அறிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் மீது மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
முன்னாள் மேலவைத் தலைவருமான ராயிஸ் யாத்திம், கடந்த ஜூன் 5-ஆம் தேதி மலாக்காவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, புதிய Yang Dipertuan Besar அறிவிக்கப்பட்டது தொடர்பில் தேச நிந்தனைக் கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
அச்சந்திப்பில் நெகிரி செம்பிலானின் 12 ஆவது Yang Dipertuan Besarராக Tunku Nadzaruddinனின் பாதுகாப்பிற்காக பிரார்த்திப்பதாகவும், அவர் அரச கடமைகளை சுதந்திரமாக நிறைவேற்றுவார் எனவும், மாநிலத்தின் சட்டம் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளுக்கு ஏற்ப அவருக்கு விசுவாசமாக இருக்குமாறும் ராயிஸ் கூறியதாகக் கூறப்படுகிறது.
குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின், குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டதாகக் கூறிய 84 வயதான ராய்ஸ், எனினும் அதனை ஏற்க மறுத்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 5,000 ரிங்கிட் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். அரசு தரப்பு 10,000 ரிங்கிட் பிணைத் தொகையையும் ஒரு ஜாமீன்தாரரையும் கோரியது.
எனினும், ராயிஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நீதிமன்றம் 8,000 ரிங்கிட் பிணைத் தொகையையும் ஒரு ஜாமீன்தாரரையும் அனுமதித்தது. அவ்வழக்கு அக்டோபர் 27 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.



