
சுபாங் ஜெயா, ஏப் 8 – புத்ரா ஹைட்ஸ் , கம்போங் கோலா சுங்கை பாருவில் எரிவாயு குழாய் தீவிபத்து சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு போக்குவரத்து அமைச்சு 55 யூனிட் யமஹா ஈகோ அவந்திஸ் 125 ரக மோட்டார் சைக்கிள்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் அன்றாட விவகாரங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த நன்கொடையை Syarikat Korporat Spanco வழங்கியதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
சம்பவத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி செயல்பாட்டு நடவடிக்கையில் முட்டுக்கட்டை ஏற்பட்டதால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த மோட்டார் சைக்கிள்கள் நன்கொடையாக வழங்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைத் தவிர இந்த தீவிபத்தில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்தன.
இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் தங்களது போக்குவரத்திற்கு முக்கியமாக மோட்டார் சைக்கிள்களையே சார்ந்து இருந்தாக இன்று புத்ரா ஹைட்ஸ் எல்.ஆர்.டி நிலையத்தில் மோட்டார் சைக்கிள்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அந்தோனி லோக் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஸ்பான்சர்கள் அல்லது ஏற்பாட்டாளர்களைக் கண்டறிய போக்குவரத்து அமைச்சு முன்முயற்சி எடுத்ததால் , முன்னணி உள்ளூர் மோட்டார் சைக்கிள் விநியோகிப்பாளர்களிடமிருந்து வாங்கப்பட்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களுக்கும் ஸ்பான்கோ நிதியுதவி செய்ய முன்வந்ததாக அவர் கூறினார்.
மோட்டார் சைக்கிளின் சந்தை விலை ஒரு யூனிட்டுக்கு சுமார் 6,000 ரிங்கிட்டை எட்டியபோதிலும் ஒரு மோட்டார் சைக்கிள் 5,000 ரிங்கிட்டிற்கு பெறப்பட்டது.