சுங்கை பூலோ, டிசம்பர்-17 – சிலாங்கூர், புன்ச்சாக் ஆலாமில் 11 மாதக் குழந்தையின் கன்னமும் காதும் வீங்கும் அளவுக்குக் கிள்ளியதற்காக, taska குழந்தைகள் காப்பகத்தின் பணியாளர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை மதியம் அக்குழந்தையின் தந்தை புகாரளித்ததை அடுத்து, 24 வயது அப்பெண்ணை, சுங்கை பூலோ போலீஸ் கைதுச் செய்தது.
வெள்ளிக்கிழமை மாலை வேலை முடிந்து குழந்தையை கூட்டி வர சென்ற போது, அதன் வலது கன்னத்திலும் காதிலும் காயமிருந்ததை தாய் கண்டுபிடித்துள்ளார்.
குழந்தைப் பராமரிப்பாளரிடம் கேட்ட போது, குழந்தை மேசையிலிருந்து விழுந்து விட்டதாக பதில் வந்தது.
எனினும் அன்றிரவு அப்பராமரிப்பாளரே கைப்பேசியில் அழைத்து, குழந்தையின் முகம் வீங்கியது தனது பணியாளரின் வேலையென தெரிவித்துள்ளார்.
இதையடுத்தே போலீசில் புகார் செய்யப்பட்டு, குழந்தையும் பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
கைதான பெண் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.