
பூச்சோங், செப்டம்பர் 17 – பூச்சோங், தொழிற்பேட்டையில் (Taman Perindustrian Puchong) இன்று அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் நான்கு தொழிற்சாலைகள் சுமார் 90 விழுக்காடு வரை தீக்கிரையாகின. எனினும், இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை.
இன்று காலை அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்தனர். சுமார் 80க்கு 100 அடி பரப்பளவில் இருந்த கட்டிடங்களுக்கு தீ பரவியிருந்தது.
தீயில் டயர் தொழிற்சாலை, குழாய் மற்றும் வால்வு உபகரணத் தொழிற்சாலை, தளவாட பொருட்கள் தொழிற்சாலை மற்றும் பொறியியல் தொழிற்சாலை ஆகியவை கடுமையாக சேதமடைந்தன. காலை 8.30 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.
சம்பவ இடத்தில் கூரை மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் இருந்ததால், காலை 9.30 மணி வரை தீக்கனல்களை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.
மொத்தம் 33 தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள், ஐந்து தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு அவசரகால வாகனங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.



