
கூச்சிங், செப்டம்பர்-17,சரவாக் கூச்சிங்கில் நடைபெற்ற மலேசிய தின விழாவில், டீசல் மானியப் பரிமாற்றம் மற்றும் மாணவர்களுக்கான விமானக் கட்டண உதவி குறித்த முக்கிய அறிவிப்புகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ளார்.
அவ்வகையில்,உடனடி அமுலுக்கு வரும் வகையில், BUDI Diesel மானியத் தகுதியை இனி குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி, BUDI95 திட்டத்தில் பயன் பெறும் எந்தவொரு மலேசியருக்கும் மாற்றிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட டீசல் வாகனங்களை வைத்துள்ள உரிமையாளர்கள், அதிகபட்சமாக 3 வாகனங்கள் வரை இந்தத் தகுதியை BUDI MADANI இணையத்தளம் வாயிலாக மாற்றிக் கொள்ள முடியும்.
இதனிடையே, தீபகற்ப மலேசியா மற்றும் சபா, சரவாக், லாபுவான் இடையே பயணம் செய்யும் பொதுப் பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் மற்றும் சமூகக் கல்லூரிகளின் 7,000-க்கும் மேற்பட்ட புதிய மாணவர்களுக்குத் தலா 500 ரிங்கிட் ஒருமுறை விமானக் கட்டண உதவியாக வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.



