
பேராக், செப்டம்பர் 16 – பேராக் மாநிலத்தில் எல்லை தாண்டிய குற்றச் செயல்களைத் தடுக்க, மஞ்சோங், பாகான் டத்தோ, தைப்பிங் மற்றும் கெரியான் (Manjung, Bagan Datuk, Taiping & Kerian) ஆகிய நான்கு மாவட்டங்களில் பாஸுக்கான் கெராக்கான் ஆம் அதாவது PGA நிரந்தரக் கட்டுப்பாட்டு மையங்களை அமைக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது.
பேராக் துணை போலீஸ் தலைவர் முகமட் அஸ்லின் சாடாரி (Mohammad Azlin Sadari) கூறுகையில், குறைந்தது 10 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சட்டவிரோத குடியேறிகள் (PATI) மாநிலத்திற்குள் நுழைவதையும் வெளியேறுவதையும் தடுப்பதே இதன் நோக்கம் என்றார்.
சிலாங்கூரில் 20, ஜொகூரில் 22 PGA கட்டுப்பாட்டு மையங்கள் உள்ள நிலையில், பேராக்கில் தற்போது பாகான் டத்தோவில் மட்டும் ஒரு மையம் உள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் பேராக்கில் சட்டவிரோத குடியேறிகள் தொடர்பாக 473 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2021 முதல் கடந்த ஆகஸ்ட் வரை கடத்தல், குடியேற்றம் உள்ளிட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 15.83 மில்லியன் ரிங்கிட் என போலீஸ் தெரிவித்துள்ளது. மஞ்சோங் மாவட்டத்தில் குடியேற்றச் சட்டத்தின் கீழ் 884 பேரும், பாகான் டத்தோவில் 295 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



