
கோலாலம்பூர், அக்டோபர்-17,பூமிபுத்ரா சமூக-பொருளாதார மேம்பாட்டு நிதியிலிருந்து 10 விழுக்காட்டுக்கும் இணையான கூடுதல் தொகையை, தகுதியுள்ள இதர பூமிபுத்ரா அல்லாத சமூகத்தினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் பரிந்துரைத்துள்ளார்.
இந்தத் பரிந்துரை, அசல் பூமிபுத்ரா ஒதுக்கீட்டைக் குறைப்பதற்கோ அல்லது யாருடைய உரிமையையும் பறிப்பதற்கோ அல்ல என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மக்களவையில் 2027 பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று பேசியபோது அவர் அதனை முன்வைத்தார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை வலுப்படுத்தவும், திறன் பயிற்சி வழங்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு உதவவும் இந்த கூடுதல் நிதி பயன்படும் என அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு தரப்பினரையும் புறக்கணிக்காமல், உண்மையான தேவையின் அடிப்படையில் வெளிப்படையான மற்றும் நியாயமான உதவி வழங்கும் முறையின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
உண்மையான தேசிய வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியை மட்டும் வைத்து மதிப்பிடப்படுவதில்லை; மாறாக, நாட்டு மக்களை எப்படி வறுமையிலிருந்து மீட்கிறோம் என்பதில் தான் உள்ளது என்றார் அவர்.
எந்தவோர் இனத்தின் நலனையும் மற்றொன்றுடன் மோதவிடுவதல்ல நமது நோக்கம்; மாறாக, ஒவ்வொரு மலேசியக் குடிமகனுக்கும் சிறந்த வாழ்க்கையை உருவாக்க சமமான வாய்ப்பு கிடைப்பதை உறுதிச் செய்வதே நமது இலக்காகும் என்று கணபதிராவ் வலியுறுத்தினார்.



