கோலாலம்பூர், நவம்பர்-25, நாட்டிலுள்ள பொது உயர் கல்விக் கூடங்களில் குறிப்பாக மருத்துவம் போன்ற அதிக வரவேற்புள்ள படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, merit எனப்படும் தகுதி அடிப்படையிலே மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, அரசாங்க உயர் கல்விக் கூடங்களில் இடம் கிடைக்காத பட்சத்தில், அதனை இனவாதமாகவோ பாகுபாடு காட்டப்படுவதாகவோ யாரும் சர்ச்சையாக்கக் கூடாது.
உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாம்ரி அப்துல் காடிர் (Datuk Seri Zambry Abdul Kadir) அவ்வாறுக் கேட்டுக் கொண்டார்.
அனைத்துப் பாடங்களிலும் A நிலையில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு எந்த பாகுபாடுமின்றி இடம் வழங்கப்படுமென பிரதமரே உத்தரவாதம் வழங்கியிருப்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இங்கு பிரச்னை என்னவென்றால், மருத்துவம், பல் மருத்துவம், மருந்தகம் போன்ற முக்கியப் படிப்புகளை தங்களின் முதல் தேர்வாக தேர்வு செய்தவர்களுக்கு விரும்பியத் துறை கிடைக்கவில்லை என்பது தான்.
மருத்துவப் படிப்புக்கு இருப்பதோ 700 இடங்கள் தான்; எல்லாருக்கும் அவற்றை கொடுப்பது இயலாத காரியம்.
எனவே, இது இந்தியர்களின் பிரச்னை மட்டுமல்ல; எத்தனையோ மலாய்க்கார மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A தேர்ச்சி வைத்திருந்தும், அவர்கள் விரும்பியத் துறை கிடைக்காமல் போயிருப்பதாக டத்தோ ஸ்ரீ சாம்ரி கூறினார்.
பேராக் தேசிய முன்னணி மாநாட்டை நிறைவு செய்து வைத்த பிறகு, BN பொதுச் செயலாளருமான அவர் அவ்வாறு கூறினார்.
அதே மாநாட்டில் முன்னதாக உரையாற்றிய பேராக் ம.இ.கா தலைவர் தான் ஸ்ரீ எம். ராமசாமி, மிகச் சிறந்த தேர்ச்சிப் பெற்ற மேலும் ஏராளமான இந்திய மாணவர்கள் பொது உயர் கல்விக் கூடங்களில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும், அவர்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியிருந்தார்.