Latestஇந்தியாஉலகம்

“மசூதியா? ஆலயமா?” — மத்தியப் பிரதேச ‘கமால் மெளலா’ தீர்ப்பால் இந்தியாவில் மீண்டும் வெடித்த மத அடையாள சர்ச்சை

“மசூதியா? ஆலயமா?” — மத்தியப் பிரதேச ‘கமால் மெளலா’ தீர்ப்பால் இந்தியாவில் மீண்டும் வெடித்த மத அடையாள சர்ச்சை

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வந்த போஜ்ஷாலா (Bhojshala)– கமால் மௌலா (Kamal Maula) வளாகம் தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தற்போது அந்நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தார் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த வளாகத்தை இந்துக்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட “போஜ்ஷாலா” ஆலயமாகவும், முஸ்லிம்கள் “கமால் மௌலா மசூதி”யாகவும் பல ஆண்டுகளாகக் கருதி வந்தனர்.
2003ஆம் ஆண்டு தொல்லியல் துறை ஏற்படுத்திய நடைமுறையின்படி, செவ்வாய்க்கிழமைகளில் இந்துக்கள் வழிபாடு நடத்தவும், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், சமீபத்தில் வழங்கப்பட்ட 242 பக்க தீர்ப்பில், இந்த வளாகத்தின் அடிப்படை வரலாற்று தன்மை சரஸ்வதி ஆலயமும் சமஸ்கிருதக் கல்வி மையமும் என்பதற்கான வரலாற்று மற்றும் கட்டிடக்கலை ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ராஜா போஜ் ஆட்சிக்காலத்துடன் தொடர்புடைய இந்த இடம், தொன்மையான கல்வி மற்றும் ஆன்மிக மையமாக இருந்ததாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், முஸ்லிம்களுக்கு தொழுகை அனுமதித்திருந்த 2003ஆம் ஆண்டு உத்தரவின் சில பகுதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம், இந்த தீர்ப்பு சொத்து உரிமையை தீர்மானிப்பதற்கானது அல்ல என்றும், இடத்தின் “வரலாற்று மற்றும் மத அடையாளம்” குறித்தே தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

வழக்கின் போது தொல்லியல் ஆய்வு அறிக்கைகள், கல்வெட்டுகள், கட்டிட வடிவமைப்புகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முஸ்லிம் அமைப்புகள் இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் சவால் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன.

அயோத்தி தீர்ப்பிற்கு பிறகு இந்தியாவில் மத அடையாளங்கள் மற்றும் வரலாற்று தளங்களைச் சுற்றிய விவாதங்கள் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், இந்த போஜ்ஷாலா தீர்ப்பும் நாடு முழுவதும் அரசியல் மற்றும் சமூக ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!