
பாலிங், மே 20 -மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மானிய விலையில் பெட்ரோல் வாங்குவதற்காக இதர தனிப்பட்ட நபர்களின் மை கார்ட் எண்களைப் பயன்படுத்தியதாக, ஆடவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 53 வயதான அஸ்மான் அஸிஸ் ( Azman Aziz) என்ற அந்த நபர், தான் குற்றமற்றவர் என்று வாதிட்டதோடு, மாஜிஸ்திரேட் ரோஹைதா இஷாக் ( Rohaida Ishak ) முன்னிலையில் அனைத்து குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்ட பிறகு அதனை மறுத்தார்.
புடி மடானி RON95 திட்டத்தின் கீழ் மானிய விலையில் பெட்ரோல் வாங்குவதற்காக, 23, 25 மற்றும் 57 வயதுடைய மூன்று நபர்களின் மை கார்ட் எண்களைப் பயன்படுத்தி அவர்களைப்போல் ஆள் மாறாட்டம் செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டின் பேரில், அனைத்துக் கட்டணங்களுக்கும் சேர்த்து மொத்தம் 594,459 லிட்டர் பெட்ரோல் வாங்கப்பட்டதால், அந்த மூன்று நபர்களும் தங்களின் மாதாந்திர மானிய ஒதுக்கீட்டை இழந்தனர்.
மார்ச் 18 ஆம் தேதி முதல் ஏப்ரல் 24 ஆம்தேதிவரை பாடாங் லெங்குவாஸ் BH பெட்ரோல் நிலையத்தில் அஸ்மான் அஸிஸ் இக்குற்றத்தை புரிந்ததாக தண்டனைச் சட்டத்தின் 416 ஆம் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் அந்த நபருக்கு 15,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு , அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் ஜூலை மாதம் 8 ஆம்தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் என நீதிமன்றம் நிர்ணயித்தது.



