Latestமலேசியா

2027 பட்ஜெட்: M40 பிரிவினரின் சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை – அன்வார்

புத்ராஜெயா, ஆகஸ்ட்.18-  2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையில், நடுத்தர வருமானம் கொண்ட M40 பிரிவினருக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். M40 பிரிவினர் உட்பட மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் முன்னுரிமைப் பணிகள் அடங்கிய பட்டியல் தங்களிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். நிதி அமைச்சில் நடைபெற்ற 2027 பட்ஜெட் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நிதி அமைச்சருமான அன்வார் அதனைக் கூறினார்.

மடானி நிர்வாகத்தின் முக்கிய கவனத்திற்குரிய பிரிவாக M40 தொடர்ந்து திகழ்வதாகவும், 2023-ஆம் ஆண்டு முதல் அவர்களுக்காகப் பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகவும் நிதி அமைச்சு முன்னதாகக் குறிப்பிட்டிருந்தது.

35,000 முதல் 100,000 ரிங்கிட் வரை வருமானம் ஈட்டும் வரி செலுத்துவோருக்கான தனிநபர் வருமான வரி விகிதங்கள் இரண்டு சதவீதப் புள்ளிகள் குறைக்கப்பட்டன. இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 2.4 மில்லியன் பேர் பயனடைந்தனர். ஒரு மாணவருக்கு 150 ரிங்கிட் வழங்கும் ஆரம்பக்கட்டப் பள்ளிப் படிப்புக்கான உதவித்தொகை, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு இரு தவணைகளாக வழங்கப்படும் 100 ரிங்கிட் Sara for All உதவித்தொகை, குழந்தைப் பருவக் கல்விக்கு 3,000 ரிங்கிட், கற்றல் குறைபாடு மறுவாழ்வுச் சிகிச்சைக்கு 10,000 ரிங்கிட் வரையிலும் வரிச் சலுகைகள், முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு முத்திரை வரி விலக்கு ஆகியவற்றை அது சுட்டிக் காட்டியது.

உணவு, வீட்டுவசதி, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றில் நிலவும் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை அரசாங்கம் தொடர்ந்து மதிப்பீடு செய்யும். அதே சமயம் இலக்கு வைக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பும் வலுப்படுத்தப்படும் என அமைச்சு குறிப்பிட்டது. 2027 பட்ஜெட் மடானி அரசின் ஐந்தாவது பட்ஜெட்டாகும். அது வாழ்க்கைச் செலவுகளைக் குறைத்தல், சமூகப் பாதுகாப்பு வலைகளை விரிவுபடுத்துதல், பொருளாதாரப் போட்டித்திறனை வலுப்படுத்துதல் மற்றும் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2027 வரவு செலவு அறிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!