
கோலாலம்பூர், ஆகஸ்ட்.18- EV எனும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், வீடுகளில் அவற்றை மின்னூட்டுவதற்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ஏற்படுத்த அரசாங்கத்திடம் முன்மொழியப்படும் என மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்திருக்கிறது.
குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மின் இணைப்புகள், குறிப்பாக ‘மினியேச்சர் சர்க்யூட் பிரேக்கர்’ சாதனத்திற்குப் பிறகு அமைக்கப்படும் மின் இணைப்புகளைக் கண்காணிக்க தீயணைப்பு, மீட்புத் துறைக்கு முழு அதிகாரம் இல்லை. எனவே முறையான வழிகாட்டுதல்கள் அவசியம் என அதன் தலைமை இயக்குநர் Datuk Seri Nor Hisham Mohammad தெரிவித்தார்.
கடந்த மூன்றாண்டுகளில் நான்கு வகைகளைச் சேர்ந்த மின்சார வாகனங்கள் தொடர்பில் சுமார் 25 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. இருப்பினும் அவ்வெண்ணிக்கை ஆண்டுதோறும் பேரளவில் அதிகரிக்கவில்லை. தீ விபத்துகள் வாகனத்திலிருந்தோ, மின்னூட்டியிலிருந்தோ, மின்னூட்டி நிலையத்திலிருந்தோ அல்லது அமைப்பின் மின்கம்பி இணைப்பிலிருந்தோ ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஆராயப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இவ்வேளையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை செராஸில் உள்ள இரண்டு மாடி அடுக்கு வீட்டில் மின்னூட்டப்பட்டுக் கொண்டிருந்த மின்சார வாகனம் சம்பந்தப்பட்ட தீ விபத்து குறித்து பேசிய Nor Hisham, அதன் காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
வீட்டு மின்னூட்டிகளை நிறுவும் மின்சார வாகன உரிமையாளர்கள், பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ற மின்னூட்டிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பதிவு செய்யப்பட்ட மற்றும் சான்றளிக்கப்பட்ட நிறுவனங்களின் சேவையை மட்டுமே நாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.



