சிங்கப்பூர், அக்டோபர்-16, தமிழகத்தின் மதுரையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) விமானத்திற்கு நேற்று மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து தள்ளி கொண்டுச் செல்லும் வகையில், சிங்கப்பூர் ஆயுதப் படையின் (SAF) 2 போர் விமானங்கள் துரத்திச் சென்று வழிகாட்டின.
அந்த AXB684 விமானம் பின்னர் இரவு 10 மணியளவில் சாங்கி அனைத்துலக விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறங்கியது.
சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் Ng Eng Hen தனது X தளத்தில் அதனை உறுதிப்படுத்தினார்.
தரையிறங்கியதும், விமானம் விமான நிலைய காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேற்கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர் சொன்னார்.
சம்பவத்தின் போது விமானத்திலிருந்த பயணிகளின் எண்ணிக்கைக் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.
இதனிடையே, புது டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அது கனடாவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் சோதனையிட்டதில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
வெடிகுண்டு புரளியைக் கிளப்பியது யார் என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேற்கண்ட இரு விமானங்களோடு சேர்த்து கடந்த 48 மணி நேரங்களில் மட்டும் 10 இந்திய விமானங்கள் வெடிகுண்டு புரளியால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளன.