Latestமலேசியா

மது போதையுடன் வாகனம் ஓட்டியதில் மோட்டார் சைக்கிளோட்டி காயம் -ஆடவன் மீது குற்றச்சாட்டு

கிள்ளான் , மே 18 – மதுபோதையில் வாகனம் ஓட்டி, கடந்த வாரம் உணவு விநியோகிப்பாளர் ஒருவருக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், பகுதி நேர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் இன்று கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மாஜிஸ்திரேட் ஏ. கார்த்தியாயினி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு, குற்றஞ்சாட்டப்பட்ட 35 வயதான லோ கீன் பெங்,(Low Kean Peng) அதனை மறுத்தார்.

கடந்த புதன்கிழமை அதிகாலை மணி 12.35 அளவில் , கிள்ளான் , பெர்சியாரன் கோத்தாவில் , 27 வயதான சுல்பிகார் ஜமீர் அமிருல் நிஜாம் என்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்தியதாக லோ கீன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மதுபானம் அருந்தியிருப்பது அவரது இரத்தத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 44(1A)-இன் கீழ் லோ கீன் மீது இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இதில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தபட்சம் 30,000 ரிங்கிட் முதல் அதிகபட்சம் 50,000 ரிங்கிட்வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும், குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவோ அல்லது பெறவோ தகுதியிழப்பு செய்யப்படுவார்.

மாதத்திற்கு இருமுறை அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் மற்றும் வழக்கு முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவரின் ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனைகளுடன் லோ கீன்னுக்கு 10,000 ரிங்கிட் ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதித்தது.

இந்த வழக்கு ஜூலை 30 ஆம் தேதியன்று மறுவிசாரணைக்கு செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!