
கோலாலம்பூர், ஏப்ரல்-14-கோலாலம்பூர் சாலைகளில் நேற்றிரவு நடந்த அதிரடி கார் துரத்தலுக்குப் பின், Schizophrenia எனப்படும் ஒருவகை மனநல நோயால் பாதிக்கப்பட்ட மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கைதுச் செய்யப்பட்டார்.
ஜாலான் செராஸில் போலீஸாரின் சோதனையில் இருந்து தப்பிக்க முயன்ற இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள அந்த அதிகாரி, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஜாலான் எம்பாட் (Jalan Empat) சாலையில் பிடிபட்டார்.
ஏப்ரல் 10-ஆம் தேதி, பணியில் இருந்த ஒரு போக்குவரத்து போலீஸ்காரரை மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற விபத்தில் இவருக்குத் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று இவரைப் பிடிக்க முயன்றபோதும், இவர் தனது காரால் பல வாகனங்களை மோதித் தள்ளினார்.
இச்சம்பவம் குறித்துப் பேசிய கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ Fadil Marsus, சம்பந்தப்பட்ட அதிகாரி மனநல சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவ விடுப்பில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
மருத்துவப் பரிசோதனையில் அவர் போதைப் பொருட்கள் அல்லது மது அருந்தவில்லை என்பது உறுதியானது.
ஓய்வு பெறும் நிலையில் இருந்த அவர் மீது, கவனக்குறைவாக வாகனமோட்டியது மற்றும் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது



