
லக்னோவ், செப்டம்பர்-24,இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் பிணைக்கைதி சம்பவத்தில், ஒரு சிறுவன் உட்பட ஐவர் உயிரிழந்தனர்.
அசாம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர், தனது வீட்டில் நடைபெற்ற மதச் சடங்கின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, தனது மனைவி மற்றும் இரண்டு இந்து மத குருக்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
பின்னர் தனது 3 பிள்ளைகளுடன் அறைக்குள் தன்னைப் பூட்டிக்கொண்ட அவர், அவர்களை பிணைக் கைதிகளாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த பதற்றமான சூழ்நிலையில், அரவிந்த் சிங்கை சரணடைய வைக்க போலீஸார் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்நிலையில், அறைக்குள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, பிள்ளைகளை மீட்பதற்காக போலீஸார் உள்ளே நுழைந்தனர்.
அப்போது அரவிந்த் சிங் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பதிலுக்கு போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் காயமடைந்து பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவரது மகனும் உயிரிழந்தார்.
அவரது இரண்டு மகள்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



