மலாக்காவில் 9 வயது மகளை தாக்கிய பெற்றோர் மீது குற்றச்சாட்டு

மலாக்கா, டிசம்பர் 18 – ஒன்பது வயது மகளை உடல் ரீதியாக காயப்படுத்தி கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பாக கணவன் மனைவி இருவர் இன்று Ayer Keroh நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட போது அவ்விருவரும் அக்குற்றத்தை மறுத்தனர். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம், தாமன் மலாக்கா பாருவிலுள்ள வீட்டில், தந்தை மகளின் கன்னத்தில் அறைந்ததாகவும், மாற்றுத் தாய் கன்னத்தை கிள்ளி கையால் அடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட இக்குற்றம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் 2,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நீதிமன்றம், ஒவ்வொரு குற்றவாளிக்கும் 2,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை விதித்து, வழக்கை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.



