
அலோர் காஜா, செப்-17-மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் மலாக்கா மாநிலச் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று முதலமைச்சர் Datuk Seri Ab Rauf Yusoh தெரிவித்திருக்கிறார்.
சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக மாநில நிர்வாகம் தொடர்பான சில விவகாரங்களுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும். எனவேதான், இந்த வெள்ளிக்கிழமைக்கும் அடுத்த வெள்ளிக்கிழமைக்கும் இடையில் சட்டமன்றம் கலைக்கப்படலாம் எனத் தாம் குறிப்பிட்டிருந்ததாக அவர் விளக்கினார்.
பொருத்தமான தேதி முடிவு செய்யப்பட்டதும், அது தொடர்பான விவரங்கள் ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவிக்கப்படும் என மலாக்கா பாரிசான் நேஷனல் தலைவருமான Ab Rauf கூறினார்.
Tanjung Bidara தொகுதியில் நடைபெற்ற மாநில அளவிலான முதியோர் தினம், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் குழந்தைகள் தினக் கொண்டாட்டங்களைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
மலாக்கா ஆளுநர் Tun Mohd Ali Rustam, Ab Raufவுடன் சேர்ந்து மாநிலச் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டதாகக் கூறி சமூக ஊடகங்களில் முன்னதாக தகவல் பரவியிருந்தது. இந்நிலையில் Ab Rauf உண்மை நிலவரத்தைத் தெளிவுபடுத்தினார்.
மலாக்கா மாநிலத்தில் 28 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அம்மாநில அரசின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.



