
இந்தோனேசியா, செப்டம்பர் 17 – இந்தோனேசியா பாலி, Crystal Bay கடற்பகுதியில் ஸ்கூபா டைவிங் நடவடிக்கையில் ஈடுபட்ட 40 வயதான மலேசியப் பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
அவர், காலை 8 மணியளவில் பயிற்றுநர், படகு ஓட்டுநர் மற்றும் சிலர் அடங்கிய குழுவுடன் டைவிங் சென்றுள்ளார். Manta Bay பகுதியில் முதல் முறையாக டைவிங் செய்தபோது அவர் இருமியதை கவனித்த பயிற்றுநர், உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார். எனினும், தொடர்ந்து டைவிங் செய்யத் தன்னால் முடியுமென அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் Crystal Bay நோக்கிச் சென்றபோதும் அவரது உடல்நிலை குறித்து பயிற்றுநர் மீண்டும் கேட்டுள்ளார். இருப்பினும், அவர் தொடர்ந்து டைவிங் செய்ய விருப்பம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Crystal Bay சென்றடைந்தபோது அப்பகுதியில் கடல் நீரோட்டம் மிகவும் வலுவாக இருந்ததால், மூன்று பேர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பான தகவல் சமூக வலைத்தளமான Threads-ல் பதிவிடப்பட்டதைத் தொடர்ந்து பரவலான கவனத்தைப் பெற்றது. இதனிடையே, அதிர்ச்சியில் இருக்கும் அவரது குடும்பத்தினர் சம்பவம் குறித்து மேல் விளக்கங்களை தெரிவிக்க மறுத்துள்ளனர்.



