
கோத்தா பாரு, செப்-17-கிளந்தானில் உள்ள உணவகம் ஒன் றில் தமது 5 வயது மகளை உதைத்துத் துன்புறுத்தியது தொடர்பில் 40 வயது ராணுவ வீரர் ஒருவர் நீதிமன்ற வழக்கை எதிர்நோக்கியுள்ளார். அக்குற்றத்திற்காக அவர் மீது இன்று கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. எனினும் அவ்வாடவர் தம் மீதான குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்து விசாரணை கோரினார்.
சிறுமி உதைக்கப்பட்டது கடுமையான குற்றம். அதோடு பாதிக்கப்பட்ட சிறுமி சொந்தமான பிள்ளை என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என நீதிமன்றத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. எனினும் குற்றம் சாட்டப்பட்டவர் ராணுவ வீரர் என்பதுடன், புற்றுநோய் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள மனைவி மற்றும் மூன்று குழந்தைகளைப் பராமரித்து வருவதால் குறைந்தபட்ச ஜாமீன் வழங்குமாறு கோரப்பட்டது.
அதனை அடுத்து, கூடுதல் நிபந்தனைகளுடன் 10,000 ரிங்கிட் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 2001 சிறார் சட்டத்தின் 31(1)(a) பிரிவின் கீழ், அதிகபட்சம் 50 ஆயிரம் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அவ்வழக்கு அக்டோபர் 22 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
உணவகத்தில் அந்நபர் சிறுமியை உதைக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி முன்னதாக வைரலானது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு 10.55 மணியளவில் Jalan Kuala Krai ஜலான் கோலா கிராயில் உள்ள உணவகத்தில் அச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விசாரணைக்கு உதவ அவரையும் சிறுமியையும் காவல்துறை கண்டுபிடித்தது. பின்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை Pengkalan Chepa காவல் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.



