புதுடில்லி, ஜூலை 16 – மலேசியாவிற்குள் 160 நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற ஆடவன் ஒருவன் சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டான். அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அந்த நட்சத்திர ஆமைகளும் கைது செய்யப்பட்ட ஆடவனும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக சென்னை ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. சுற்றுலா விசா மூலம் மலேசியாவிற்கு பயணம் செய்வதற்கு திட்டமிட்டிருந்த அந்த ஆடவனிடம் ஒவ்வொரு ஆமைக்கும் 100 ரூபாய் அதாவது 5 ரிங்கிம் 50 சென் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
தென் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆமை வளர்ப்பாளர் ஒருவர் அந்த ஆமைகளை ஒப்படைத்ததாகவும் 50 விழுக்காடு ஆதாயத்திற்கு அந்த நபர் அதனை விற்பதற்கு திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. இந்தியாவின் வனவிலங்கு சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட நட்சத்திர ஆமைகள் தென்னிந்தியாவில் சில பகுதிகளில் காணப்படுகிறது. தென் கிழக்காசிய நாடுகளில் இந்த வகை ஆமைகளை சிலர் வளர்க்கின்றனர். கடந்த 2022 ஆண்டு உயிருடன் 1,364 நட்சத்திர ஆமைகளை கடத்தும் முயற்சியையும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் முறியடித்தனர்.