
கோலாலம்பூர், ஜூன்-15-நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் தொடர்பாக 76,000-க்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளதாக, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
2021-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில், நாடு முழுவதும் மொத்தம் 76,361 வனவிலங்கு மோதல் புகார்கள் பதிவாகியுள்ளன.
இதனால் பயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சுமார் 58.7 மில்லியன் ரிங்கிட் அளவுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஜோகூர் மாநிலத்தில் மட்டும் 9,063 புகார்கள் பதிவாகி, 7.5 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயம், தோட்டங்கள் மற்றும் நகரமயமாக்கல் காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு, வனவிலங்குகளின் வாழ்விடங்கள் சுருங்குவதே இந்த மோதல்களுக்கு முக்கிய காரணம் என்று அமைச்சு கூறியது.
குரங்குகள், யானைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் புலிகளினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வரும் வேளையில், யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மின்சார வேலிகள் மற்றும் பிரத்யேக பாதுகாப்பு திட்டங்களை அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகிறது.
முக்கியமாக, கெமாஸ் – ஜோகூர் பாரு இடையிலான இரட்டை இரயில்பாதை திட்ட பகுதிகளில் யானைகள் ஊடுருவுவதை தடுக்க சிறப்பு கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சு கூறியது.



