
கோலாலம்பூர், அக்டோபர் 6 – மலேசியாவில் மரணங்களுக்கு முக்கிய காரணமாக இருதய நோய் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும் இருதய நோயால் 17,421 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ட்ஸுல்கெஃப்லி அஹ்மாட் (Datuk Seri Dr Dzulkefly Ahmad) தெரிவித்தார்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமன் ஆகியவை இருதய நோய்க்கான முக்கிய காரணங்களாக உள்ளன. இந்தப் பிரச்சினைகள் தற்போது வயதானவர்களை மட்டுமின்றி இளைஞர்களையும் பாதித்து வருவதாக அவர் கூறினார்.
18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் 192,464 பேருக்கு நீரிழிவு நோயும், 339,853 பேருக்கு உயர் இரத்த அழுத்தமும் இருப்பதாக 2023ஆம் ஆண்டின் தேசிய சுகாதார ஆய்வு மதிப்பிட்டுள்ளது. இவர்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு தங்களுக்கு இந்நோய் இருப்பது தெரியவில்லை.
இதனால், நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய 2022ஆம் ஆண்டு முதல் தேசிய சுகாதாரப் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 40 வயதுக்குட்பட்ட 26.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.



