Latestமலேசியா

கல்விக்குக் கரம் கொடுக்கும் ஸ்கூடாய் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம்: 8வது ஆண்டாக 41 மாணவர்களுக்கு நிதியுதவி

ஜோகூர், அக்.06-

கல்வியே தனிமனித மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான அடித்தளம் என்ற நோக்கில், அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக Skudai வட்டாரத்தைச் சேர்ந்த உயர்கல்வியைத் தொடரவுள்ள 41 மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கியுள்ளது.

அந்நிகழ்வில் ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பா. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் மாணவர்களுக்கு கல்வி நிதியுதவியை வழங்கியதுடன், அவர்களின் கல்விப் பயணத்துக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இவ்வேளையில், தலைமையுரையாற்றிய ஆலயத் தலைவர் டத்தோ கே. எஸ். பாலகிருஷ்ணன், கல்வியே ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் வலிமையான கருவி எனக் குறிப்பிட்டார். உயர்கல்வியைத் தொடங்கும் மாணவர்களுக்கு ஏற்படும் ஆரம்பகட்ட கல்விச் செலவுகளுக்கு இந்த நிதியுதவி பேருதவியாக இருக்கும். அது அவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, கல்வித் துறையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முன்னாள் தலைமையாசிரியர்களான திரு. சேதுபதி, திரு. நடராஜன், திரு. பூபாலன் மற்றும் திரு. வடிவேலு ஆகியோர் அந்நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர். கல்விச் சேவைக்காக கௌரவிக்கப்பட்ட அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அந்நிகழ்வில் ஜோகூர் மாநில ம.இ.கா. துணைத்தலைவர் திரு. நிலாராஜா, அவரது குழுவினர், ம.இ.கா. தொகுதித் தலைவர்கள், சுற்றுவட்டாரப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆலய நிர்வாக உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!