Latestமலேசியா

தொழில்துறைக்குத் தூய காற்று விதிகளில் இனி ஒட்டுமொத்த விலக்கு இல்லை — ஜோசப் குருப்

கோலாலம்பூர், அக்.06–தூய்மையான காற்று விதிமுறைகளின் கீழ் தொழில்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பொதுவான விதிவிலக்குகளை அரசாங்கம் இனி நீட்டிக்காது. இயற்கை வள மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் Datuk Seri Arthur Joseph Kurup அவ்வாறு தெரிவித்திருக்கிறார். நடப்பிலுள்ள பெரும்பாலான விதிவிலக்குகள் அடுத்தாண்டு ஜனவரி வாக்கில் காலாவதியாகும் என அவர் கூறினார்.

புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே கூடுதல் கால அவகாசம் கோரும் நிறுவனங்களுக்கு தற்காலிக நீட்டிப்பு வழங்கப்படும். நீண்டகாலமாக வழங்கப்பட்ட விதிவிலக்குகள் இனி தொடராது.

தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகளின் வெளியேற்றங்களுக்கு கடுமையான வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பல நிறுவனங்கள் பல ஆண்டுகளாக விதிவிலக்குகளைப் பெற்று வந்ததாக Arthur குறிப்பிட்டார். தற்போது மாசு கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்கள் எளிதில் கிடைப்பதால், விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.

தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தவும் கட்டமைப்பு மேம்பாடுகளை மேற்கொள்ளவும் நிறுவனங்களுக்கு அவகாசம் தேவை என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது. எனினும் தாராளமான கால நீட்டிப்புகள் இனி இருக்காது.

மேலும், அனைத்து தொழில்துறைகளும் விதிவிலக்கின்றி, மிகத் தாமதமாக 2030ஆம் ஆண்டுக்குள் 100 விழுக்காடு விதிமுறையை பின்பற்ற வேண்டும். 2050ஆம் ஆண்டுக்குள் நிகரப் பூஜ்ஜிய பசுமை இல்லா வாயு வெளியேற்றத்தை அடையும் நாட்டின் இலக்கிற்கு அது முக்கியமானது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!