
கோலாலம்பூர், அக்.06-மியான்மர் அதிபர் Min Aung Hlaing அடுத்த சில நாட்களில் மலேசியாவுக்கு வருகை புரியவிருக்கிறார். மலேசியாவில் உள்ள மியன்மார் அகதிகள் விவகாரத்துக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அவர் வரவிருப்பதாக பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
அச்சந்திப்பின்போது மியன்மார் நாட்டினரை படிப்படியாகத் தாயகம் திரும்ப வைப்பது குறித்து மலேசியா வலியுறுத்தும். அவர்கள் திரும்பிய பின்னர் துன்புறுத்தல், அழுத்தம் அல்லது மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகாத வகையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படும் என அன்வார் கூறினார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் சுமார் 10,000 மியன்மார் நாட்டினர் விமானம் மற்றும் கடல் வழியாகத் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ரோஹிங்கியா, Arakan, Karen, Shan ஆகிய இனத்தவர்களும் அடங்குவர். செப்டம்பர் 29ஆம் தேதி முதல் கட்டமாக 1,476 பேர் மியன்மாருக்கு அனுப்பப்பட்ட நிலையில், மேலும் 3,524 பேரைத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.
மியன்மார் தனது 5,000 குடிமக்களை கட்டம் கட்டமாகத் திரும்பப் பெறும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டாம் கட்டமாக மியன்மார் நாட்டினரைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கான தேதியை உறுதிப்படுத்த அந்நாட்டின் பதிலுக்காக மலேசியா காத்திருக்கிறது.
மியன்மார் அத்திட்டத்திற்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே அகதிகள் திருப்பி அனுப்பப்படுவர். இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு மியன்மாருடன் இணைந்து தீர்வு காண வேண்டியது அவசியம் என அன்வார் குறிப்பிட்டார்.
இதனிடையே, அகதிகள் விவகாரத்தை நிர்வகிக்க மலேசியா தனது சொந்த அகதிகள் பதிவு முறையையும் biometric தரவுத்தளத்தையும் உருவாக்கி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.



