![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/09/download-780x470.jpeg)
கோலாலம்பூர், செப்டம்பர் 17 – குரங்கம்மை பரவலை உலகளாவிய சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ள நிலையில், மலேசியாவில் தற்போது புதிதாக ஒருவருக்கு அந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்த நோயாளி ஓர் ஆண் என்றும்; கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி அன்று காய்ச்சல், தொண்டைப் புண், மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் அவருக்கு ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 12 அன்று, அந்த நோயாளியின் உடலில் தடிப்புகள் தோன்றியதாகவும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
அறிகுறிகள் தோன்றுவதற்கு முன் 21 நாட்களில், அந்த நோயாளி வெளிநாடு பயணம் மேற்கொண்ட வரலாறும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கடந்தாண்டு பதிவான அதிக கடுமையற்ற கிளேட் 2 ரகத்தைச் சேர்ந்த 10 குரங்கு அம்மை பாதிப்புகள் போலவே, இந்த புதிய நோய் தொற்றுச் சம்பவமும் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் ராட்ஸி அபு ஹாசன் (Dr Radzi Abu Hassan) தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கிட்டத்தட்ட 6.2 மில்லியன் பயணிகளிடம் அனைத்துலக நுழைவாயிலில் சோதனைகள் நடத்தப்பட்டன.
அந்த சோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன் கோவிட்-19 தொற்றுநோயின் பரவலை அறிவதற்காக செயல்படுத்திய, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை, மீண்டும் செயல்படுத்த அமைச்சு திட்டமிடவில்லை என்று தெரிவித்துள்ளது.