
கோலாலம்பூர், ஆகாஸ்ட் 11 – மலேசியாவிலிருந்து பேங்காக் சென்ற விமானத்தில் தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் நடுவானில் பரபரப்பை ஏற்படுத்தியதால், பயணிகள் மற்றும் விமான ஊழியர்களால் கட்டுப்படுத்தப்பட்டார்.
சம்பவம் தொடர்பான ஐந்து நிமிட காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், அந்த அதிகாரி தொடர்ந்து கூச்சலிட்டதுடன், விமானத்தை தரையிறக்குமாறு கோரியதாகவும், விமானத்தின் கதவைத் திறக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சு, தனது கொள்கை மற்றும் திட்டமிடல் அலுவலகத்தில் பணியாற்றும் லெப்டினன்ட் பதவி அதிகாரியே இச்சம்பவத்தில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தியது.
அவர் ஏற்கனவே மனநல சிகிச்சை பெற்று வந்ததாகவும், தனிப்பட்ட உடல்நலப் பிரச்சினை காரணமாக விமானத்தில் அவரது அறிகுறிகள் தீவிரமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அந்த அதிகாரி பேங்காக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கண்காணிப்பு மற்றும் மேல் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.



