
புத்ராஜெயா, மே 15 – மலேசியாவின் மக்கள் தொகை 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 34.4 மில்லியனாக உயர்ந்துள்ளதாக மலேசிய புள்ளிவிபரத் துறை (DOSM) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் மலேசிய மக்கள் தொகை 34.2 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மலேசிய தலைமை புள்ளிவிபர அதிகாரி டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் (Datuk Seri Dr Mohd Uzir Mahidin) கூறுகையில், நாட்டில் ஆண்கள் எண்ணிக்கை 18 மில்லியனாகவும், பெண்கள் எண்ணிக்கை 16.3 மில்லியனாகவும் உள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 110 ஆண்கள் உள்ளனர்.
65 வயதுக்கு மேற்பட்டோரின் விகிதம் 8 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், புதிதாக பிறந்த குழந்தை முதல் 14 வயதுக்குட்பட்டோரின் விகிதம் 21.6 விழுக்காடாக குறைந்துள்ளது.
இன அடிப்படையில், மலாய்காரர்கள் 58.3 விழுக்காடு, சீனர்கள் 22.1 விழுக்காடு, இந்தியர்கள் 6.5 விழுக்காடு மற்றும் மற்ற இனத்தவர்கள் 12.3 விழுக்காடாக பதிவாகியுள்ளனர்.
மேலும், 2026 முதல் காலாண்டில் 94,807 குழந்தைகள் பிறந்துள்ளன. அதிக பிறப்புகள் சிலாங்கூர் மாநிலத்தில் பதிவாகியுள்ளன என்று மலேசிய புள்ளிவிபரத் துறை தெரிவித்துள்ளது.



