Latestமலேசியா

மாணவரை அறைந்த கட்டொழுங்கு ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட 200 ரிங்கிட் அபராதத்தை நீதிமன்றம் உறுதி செய்தது

கோத்தா பாரு, அக்-22-கிளந்தானில் கடந்தாண்டு மாணவர் ஒருவரை அறைந்து காயப்படுத்திய கட்டொழுங்கு ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட 200 ரிங்கிட் அபராதத்தை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. Ketereh இடைநிலைப் பள்ளியில் பணியாற்றும் 57 வயதான Abdull Ropor Fakir எனும் அந்த கட்டொழுங்கு ஆசிரியர் மாணவரைத் தாக்கிய குற்றத்தை ஒப்புக் கொண்டார். அக்குற்றத்திற்கு அதிகபட்சமாக ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது 2,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பள்ளி விதிகளை மீறிய மாணவரைக் கண்டிப்பது ஆசிரியரின் பொறுப்பு என்றாலும், அதற்காக உடல் ரீதியில் தண்டனை அளித்தது முறையற்றது என மாஜிஸ்திரேட் வினோஷென் ரவீந்திரன் தெரிவித்தார். ஆசிரியர்கள் மாணவர்கள் மீது உடல் ரீதியான பலத்தைப் பயன்படுத்தும் சம்பவங்களை நீதிமன்றம் தீவிரமாகக் கருதுகிறது. ஒவ்வொரு வழக்கிலும் உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நீண்ட தலைமுடி வைத்திருந்த அம்மாணவரை பலமுறை எச்சரித்த பின்னரே ஆசிரியர் அறைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மாணவர் எச்சரிக்கையைப் புறக்கணித்ததால் ஆசிரியர் ஆத்திரமடைந்திருக்கலாம் என்றும், மாணவரைக் காயப்படுத்தும் நோக்கம் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியர் மன்னிப்புக் கோரியதையும், தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததையும், இனி அத்தகையச் செயலில் ஈடுபடமாட்டேன் என உறுதியளித்ததையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டது. ஆசிரியர் அறைந்த சம்பவத்தில் மாணவரின் இடது கன்னம் மற்றும் உதட்டில் வீக்கமும் காயங்களும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!