
கோலாலம்பூர், அக்- 22-அரசு ஊழியர்கள் Waze செயலியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், Google Mapsசைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப்படுவதற்கான காரணம் குறித்து தேசிய இணையப் பாதுகாப்பு நிறுவனமான Nacsa விளக்கமளித்துள்ளது.
அத்தடைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, Waze இஸ்ரேலைத் தளமாகக் கொண்டு இயங்குவதுடன், மலேசியா அங்கீகரிக்காத அந்நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டுள்ளது. அடுத்து அச்சட்டங்கள் மலேசியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என Nacsa தலைமை நிர்வாக அதிகாரி Dr Megat Zuhairy Megat Tajuddin தெரிவித்தார்.
Google Maps அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்டு இயங்குவதால், அமெரிக்கச் சட்டங்களுக்கு உட்பட்டுள்ளது. TuJu உள்ளிட்ட பிற வழிகாட்டி செயலிகளும் Google Maps-ஐ அடிப்படையாகக் கொண்டிருப்பதை Nacsa மறுக்கவில்லை என அவர் கூறினார். அதோடு பிற வழிகாட்டி சேவைகள் குறித்தும் தொடர்ந்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என்றாரவர்.
2019ஆம் ஆண்டில் மலேசியாவில் Waze செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 63 லட்சமாக இருந்தது. அதன் மூலம் மலேசியா உலகளவில் ஐந்தாவது இடத்திலும், ஆசியான் வட்டாரத்தில் முதலிடத்திலும் இருந்தது.
அரசாங்கத்தின் முக்கியத் தகவல்களும் தனிநபர் தரவுகளும் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும் என்ற பாதுகாப்புக் கவலைகளைத் தொடர்ந்து, அரசு ஊழியர்கள் Waze பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கேட்டுக் கொண்டிருந்தார். பொதுமக்களும் அச்செயலியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தியிருந்தார்.



