கிள்ளான், டிசம்பர்-14, சிலாங்கூர், கிள்ளானில் பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலை நிர்வாகம் மாதக் கணக்கில் தங்களுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதைக் கண்டித்து, 250-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று அமைதி மறியலில் ஈடுபட்டனர்.
சம்பள பாக்கியுடன், சட்டவிரோதமாக மொத்தம் 800,000 ரிங்கிட்டுக்கும் மேல் பிடித்தம் செய்திருப்பதாகக் கூறி, Kawaguchi நிறுவனத்திற்கு எதிராக 57 தொழிலாளர்கள் புகார் செய்த 2 வாரங்களில் இந்த அமைதி மறியல் நடத்தப்பட்டது.
டிசம்பரில் தருவதாக சொன்னார்கள், ஆனால் இன்னும் தந்தபாடில்லை.
இந்நிலையில் தொழிற்சாலை மூடப்படவிருப்பதாக தகவல்கள் காதுக்கு எட்டியதால், சம்பளம் தராமலேயே போய் விடுவார்களோ என்ற பயத்தில் மறியல் செய்தோம் என, தொழிலாளர் ஒருவர் FMT-யிடம் கூறினார்.
அடுத்தாண்டு செப்டம்பரில் தான் தர முடியும் என நிர்வாகம் இப்போது கூறுவது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் சொன்னார்.
பேச்சுவார்த்தைக்கு வர வேண்டுமென அமைதி மறியலின் போது அவர்கள் வற்புறுத்திய நிலையில், நிர்வாக உறுப்பினர்கள் சிலர் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கலைக்கப்பட்டது.
அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை என, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் (Datuk Hussein Omar Khan) தெரிவித்தார்.
ஏப்ரல் முதல் 200-க்கும் மேற்பட்ட வங்காளதேச தொழிலாளர்களுக்கு சம்பளம் தராமல், அவர்களின் கடப்பிதழ்களையும் பிடித்து வைத்திருப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து, Kawaguchi நிர்வாகத்தை தொழிலாளர் துறை விசாரித்து வருவதாக நம்பப்படுகிறது.