சுங்கை பூலோ, டிசம்பர்-16 – மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் தனியார் பாலர் பள்ளிகளுக்கான மானியத் திட்டத்தின் வாயிலாக, இவ்வாண்டு 4,709 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
9.3 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் 183 தனியார் பாலர் பள்ளிகளை அது உட்படுத்தியுள்ளது.
அதே சமயம், Tadika Genius Bersinar திட்டத்தின் கீழ் 126 பாலர் வகுப்பு மாணவர்களுக்கு, 277,200 ரிங்கிட் நிதி வழங்கப்பட்டுள்ளதாக, மித்ரா தலைவர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.
சிலாங்கூர், சுங்கை பூலோவில் MITRA – Tadika Genius Bersinar பாலர் வகுப்பில் கல்வியை முடித்த 52 சிறார்களுக்கான பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற போது, அவர் அவ்வாறு கூறினார்.
4 முதல் 6 வயதிலான இந்தியச் சிறார்களுக்கு ஆரம்பக் கல்விக் கிடைப்பதையும், B40 குடும்பங்களின் சுமையைக் குறைப்பதையும் அத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார் அவர்.
அதோடு, தமிழ்ப் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பி வைக்கும் feeder திட்டமாகவும் இந்த Tadika Genius Bersinar விளங்குகிறது.
மற்றொரு நிலவரத்தில், உள்நாட்டு உயர் கல்விக் கூடங்களில் பயிலும் B40 இந்தியக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, மித்ராவின் நிதியுதவி இவ்வாரத்தில் விநியோகம் செய்யப்படும்.
IPT 4.0 MITRA எனும் அத்திட்டத்தின் கீழ் 12,400 மாணவர்களுக்கு வழங்கப்பட ஏதுவாக 25 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
One-off அல்லது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் அவ்வதவிக்கு இதுவரை 12,626 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், அவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
முதல் கட்டமாக தகுதிப் பெற்ற 1,088 பேருக்கு, அவர்களின் BSN வங்கிக் கணக்குகளில் இவ்வாரம் 2,000 ரிங்கிட் போடப்படும்.
அதுவே மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 3,000 ரிங்கிட் வழங்கப்படுமென, பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் சொன்னார்.