வலியோடு போராடும் ஷமேதா; வணக்கம் மலேசியா கோல்ஃப் போட்டியில் உருகிய கொடைநெஞ்சங்கள்; சில நிமிடங்களில் திரண்ட RM22,500

கோலாலாம்பூர், ஜூன்-10-‘வணக்கம் மலேசியா’ மின்னியல் ஊடகத்தின் அண்மைய இரண்டாவது நல்லெண்ண கோல்ஃப் போட்டியின் வழியாக, இடுப்பு எலும்பு முறிந்த ஷமேதா கிருஷ்ணன் என்ற 22 வயது இளம் பெண்ணுக்கு, எதிர்பாராத வகையில் வருகையாளர்களின் முயற்சியில் 22,500 ரிங்கிட் நன்கொடை திரண்டுள்ளது.
வணக்கம் மலேசியாவின் CSR சமூகக் காரியங்களுக்கு நிதித் திரட்டும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நல்லெண்ண கோல்ப் போட்டியில், நாட்டின் இந்த முதல் நிலை தமிழ் மின்னியல் ஊடகம் சார்பில் ஷமேதாவுக்கு 1,000 ரிங்கிட் வழங்கப்பட்டது.
ஆனால், ஷமேதாவின் சோகக் கதையைக் கேட்ட வருகையாளர்கள், கொடைநெஞ்சர்கள், சிறப்பு விருந்தினர்கள், வர்த்தகர்கள், பெருநிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அங்கேயே தங்களின் சொந்த முயற்சியில் 22,500 ரிங்கிட்டைத் திரட்டி ஏற்பாட்டுக் குழுவையே மலைக்க வைத்தனர்.
வணக்கம் மலேசியாவின் 1,000 ரிங்கிட்டோடு, இந்த ‘திடீர்’ நிதி திரளும் ஷமேதாவிடன் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தந்தை சரவண தீர்த்தா வீடியோ வாயிலாக வணக்கம் மலேசியாவுக்கு நன்றித் தெரிவித்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்தாண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த சாலை விபத்தில் இடது இடுப்பு எலும்பு முறிந்து நடக்கும் திறனை இழந்திருப்பவர் தான் ஷமேதா; வலது கால் முட்டியும் கடுமையாக சேதமடைந்து கால் பகுதியில் இரத்த ஓட்டமும் தேக்கமடைந்துள்ளது.
என்றாலும், இப்படியே முடங்கிக் கிடக்காமல், எப்படியும் நடந்து விட வேண்டும் என்ற முனைபபோடு டிப்ளோமா படித்து வருகிறார்.
இந்நிலையில், மூன்றாவது அறுவை சிகிச்சைக்காக் காத்திருக்கும் மகளுக்கு இந்த நேரத்தில் இவ்வளவுப் பெரிய உதவிக் கிடைத்திருப்பது உள்ளபடியே பெரும் தெம்பை ஏற்படுத்தியுள்ளதாக சரவண தீர்த்தா கூறினார்.
மகளின் மீட்சிக்கான தனது போராட்டத்தில் உடனிருக்கும் வணக்கம் மலேசியாவுக்கு நன்றிகூற வார்த்தை இல்லை என மீண்டும் குறிப்பிட்ட அவர், இந்த ஆதரவு தொடரும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
வணக்கம் மலேசியாவின் நல்லெண்ண கோல்ஃப் போட்டியில் நிகழ்ந்த இந்த எதிர்பாரா திருப்பம் ஒரு சிறிய உதவியே என்றாலும், நல்ல உள்ளம் படைத்தவர்கள் நம்மிடையே இன்னமும் பலர் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதை இது மீண்டும் புலப்படுத்தியுள்ளது.
நடக்க முடியவில்லையே என்றே வேதனையில் முடங்கி விடாமல், வலிமையோடு விடாமுயற்சியைத் தொடரும்
இந்த இளம் பெண்ணுக்கு, இன்னமும் உதவிகள் தேவைப்படுகின்றன.
எனவே, இவருக்கு உதவ எண்ணம் கொண்டுள்ளோர், திரையில் காணும் எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
சமேதாவின் கனவு எழுந்து நடப்பது மட்டுமல்ல, வாழ்வை மீண்டும் தொடங்குவதே..
நமது ஒவ்வொருவரின் பங்களிப்பும் சமேதாவின் ஒவ்வோர் அடியாக மாறட்டும்…



