Latestமலேசியா

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவுக்கு F1 பந்தயம் மீண்டும் திரும்புகிறதா? நாளை முக்கிய அறிவிப்பு என்கிறார் பிரதமர் அன்வார்

புக்கிட் மெர்தாஜாம், ஜூலை-25-உலகப் புகழ்பெற்ற F1 கார் பந்தயம் மீண்டும் மலேசியாவுக்குத் திரும்புவது குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

F1 பந்தயம் செப்பாங் பந்தயத் தளத்திற்குத் திரும்பலாம் என்ற வதந்திகளுக்கு மத்தியில் பினாங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞாயிறன்று எதுவும் உறுதியாகும் என்றார்.

கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற்றிருக்க வேண்டிய பஹ்ரேய்ன் F1GP பந்தயம், மத்தியக் கிழக்கில் தொடரும் மோதல்கள் காரணமாக முன்னதாக ஒத்தி வைக்கப்பட்டது.

அதனை வரும் அக்டோபர் 4-ஆம் தேதி நடத்தலாம் என முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளும் மந்தமடைந்துள்ளன.

இதையடுத்து, மாற்று ஏற்பாடாக செப்பாங் பந்தயத் தளத்தைத் தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன.

இது குறித்து இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக, அதன் அமைச்சர் Dr Taufik Johari-யும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மலேசியா ஆகக் கடைசியாக 2017-ஆம் ஆண்டு F1 பந்தயத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுமார் 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் F1 பந்தயம் மலேசிய மண்ணுக்கு திரும்பலாம் என்றச் செய்தியால் கார் பந்தய இரசிகர்கள் நாளை அறிவிப்புக்காக பெரும் ஆவலுடன் காத்திருப்பதில் என்பதில் ஐயமில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!