மலேசியாவுக்கு வருகை புரியும் 2026 பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சிறப்பு வாகன பதிவு எண் பட்டைகள் அறிமுகம்

கோலாலம்பூர், ஜூன் 10 – மலேசியாவுக்கு வருகை புரியும் 2026 பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, V___MY என்ற சிறப்பு வாகனப் பதிவுத் தகடு தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, அதிக மதிப்புள்ள வாகனப் பதிவுத் தகடுகளால் ஈர்க்கப்படுபவர்களைக் கவரும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் (Tiong king sing) கூறினார்.
JPJ e -Bid இணையதளத்தில் ஜூன் 13 ஆம் தேதி முதல் 17ஆம் தேதிவரை ஏலம் நடைபெறும் என்பதோடு , தொடக்க ஏலத்தொகை குறைந்தபட்சம் 300 ரிங்கிட்டிலிருந்து தொடங்கும்.
இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்புப் பதிவுத் தகடுகள் மூலம் 11 மில்லியன் ரிங்கிட் முதல் 20 மில்லியன் ரிங்கிட்வரை சாலை போக்குவரத்துத்துறை வசூலித்துள்ளது.
அதிக உள்நாட்டு மற்றும் அனைத்துலக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் எங்கள் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மலேசியாவுக்கு வருகை புரியும் 2026 பிரச்சாரத்தை விளம்பரப்படுத்த கூடுதல் நிதி திரட்ட இந்த முன்னெடுப்பு உதவுகிறது என என்று தியோங்கின் உரையை துணையமைச்சர் சியூ சூன் மான் ( Chiew Choon Man ) வாசித்தார்.
பொதுமக்கள், அரசு சாரா அமைப்புகள், சுற்றுலா நடத்துநர்கள் மற்றும் தொழில்துறை சார்ந்தவர்கள் மலேசியாவுக்கு வருகை புரியும் 2026 ஆம் ஆண்டை நோக்கிய விளம்பரங்களையும் முயற்சிகளையும் மேம்படுத்த வேண்டும் என்றும் தியோங் வலியுறுத்தினார்.
47 மில்லியன் அனைத்துலக சுற்றுலாப் பயணிகளை வரவேற்பது மட்டுமல்லாமல், மலேசியா வழங்கக்கூடிய மேலும் பல இடங்களையும் அனுபவங்களையும் ஊக்குவிப்பதும் எங்கள் இலக்காகும்.
இதன் மூலம், நமது நாட்டின் தனித்துவத்தைப் பற்றி அதிகமான மக்கள் அறிந்துகொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.



