
திரங்கானு, அக்டோபர் 26 – திரங்கானு டுங்குனிலுள்ள சூரா (Sura) இடைநிலைப்பள்ளியில், 2020ஆம் ஆண்டு எஸ்.பி.எம். (SPM) மாதிரித் தேர்வின்போது உள்ளாடைக்குள் ஐபோனை மறைத்து வைத்திருந்த முன்னாள் மாணவி நூர் நபிலா அஹ்மட் சம்பாலாவின் (Nur Nabilah Ahmad Zambala) மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
தன்னைச் சோதித்ததற்காகவும் தொலைபேசியைக் கைப்பற்றியதற்காகவும் இரண்டு ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக அவர் 400,000 ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
தொலைபேசியைக் கைப்பற்றிப் பாதுகாக்கப் பள்ளிக்கு அதிகாரம் இருந்தாலும், அதிலுள்ள தகவல்களைப் பார்ப்பதற்கு அனுமதி இல்லை என்று நீதிபதி யுஸ்ரின் ஃபைட்ஸ் யூசோஃப் (Yusrin Faidz Yusoff) தெரிவித்தார். இருப்பினும், ஆசிரியர்கள் முறைகேடு குறித்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தியது நியாயமானது என்றும் கூறினார்.
மேலும், தொலைபேசியில் சில பாடங்களுக்கான வினாத்தாள்கள், குறிப்புகள் மற்றும் விடைக்குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அனுமதியின்றி தொலைபேசியைச் சோதித்திருந்தாலும், அதிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்களை நீதிமன்றத்தில் பயன்படுத்தலாம் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.



