
கிளானா ஜெயா, ஜூன்-27-சிலாங்கூர், கிளானா ஜெயாவில், உணவு விநியோக முகவரியைக் கண்டறிவதில் ஏற்பட்ட சிறு தாமதத்தால், 28 வயது விநியோக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாமாமன் ராசா சாயாங்கில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில், அதிகாலை 5.30 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
‘Man’ என்று அறியப்படும் அந்த ஊழியர், இருட்டான சூழலில் முகவரியைக் கண்டுபிடிக்க முடியாததால் வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டு வழிகாட்டுதலைக் கேட்டுள்ளார்.
ஆனால், வாடிக்கையாளர் அவரிடம் முறையாகப் பேசாமல் அலட்சியம் காட்டியுள்ளார்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற விநியோக ஊழியர், அங்கு நின்றிருந்த இருவரிடம் முகவரியைக் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென வன்முறையாக மாறியது. சந்தேக நபர்களில் ஒருவர் விநியோக ஊழியரை ஹெல்மெட்டால் பலமாகத் தாக்கியதுடன், மற்றொருவர் அவரது முகத்தில் குத்தியுள்ளார்.
அதோடு நிறுத்தாமல், அவரது கைப்பேசியையும் பறித்து சாலையில் வீசி உடைத்துள்ளனர்.
அந்தச் சமயத்தில் கடைத்தொகுதியிலிருந்து மேலும் 3 நபர்கள் வெளிவரவே, உயிருக்கு அஞ்சிய அந்த ஊழியர் அங்கிருந்து தப்பியோடினார்.
அருகில் இருந்த குடியிருப்புப் பகுதிக்குச் சென்று, அங்கிருந்த ஒரு வீட்டின் உதவியோடு அவசரச் சேவைப் பிரிவினரை அழைத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டுள்ளதை அடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



