
தெஹ்ரான், ஜூன்-27-Hormuz நீரிணையில் வணிகச் சரக்குக் கப்பல் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்புத் தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் இன்று அதிரடி வான் தாக்குதலை நடத்தியுள்ளன.
ஈரானின் தெற்குத் துறைமுக நகரான சிரிக்கில் (Sirik) உள்ள கடலோர ராடார் நிலைகள் மற்றும் இராணுவக் கூடங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், வணிகக் கப்பல்கள் மீதான ஈரானின் இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ‘முட்டாள்தனமாக’ மீறும் செயல் என்று வன்மையாகக் கண்டித்துள்ளார்.
தங்களின் அனுமதியின்றி கப்பல்கள் வளைகுடாப் பகுதிக்குள் நுழையக் கூடாது என ஈரான் முன்னதாக எச்சரித்தது.
இருப்பினும், கடந்த வியாழக்கிழமை இப்பாதையைக் கடந்த 42 கப்பல்களில் பாதியளவிலான கப்பல்கள், ஓமான் கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள ஈரானால் அங்கீகரிக்கப்படாத மாற்றுப் பாதையைப் பயன்படுத்தியதாக ‘Kepler’ கண்காணிப்பு தளம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியப் பாதையாக விளங்கும் Hormuz நீரிணையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பதற்றத்தால், அனைத்துலகச் சந்தையில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.



