
கோலாலம்பூர், செப்டம்பர்- 29,
தலைநகரின் மத்தியிலுள்ள கான்டோவில் போலீசார் நடத்திய சோதனையில், ‘எம்.டி.எம்.ஏ’ (MDMA) போதைப்பொருள் கலந்த மூலிகை பானங்களை விநியோகித்த கும்பல் வசமாக சிக்கியது.
கடந்த வியாழக்கிழமை ஜாலான் யாப் குவான் செங் பகுதியில் நடந்த சோதனையில், 30 மற்றும் 32 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுலிஸ்மி அபெண்டி சுலைமான் தெரிவித்தார்.
சோதனையில் 239.5 கிலோ கிராம் எடையுள்ள 503 பாட்டில்களில் திரவ போதை பொருட்களும், 298 கிராம் எடையிலான ‘MDMA’ தூள் வகை போதை பொருட்களும், 20 கிராம் எரிமின் மற்றும் 19.6 கிராம் கெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இதன் மொத்த மதிப்பு சுமார் 2 இலட்சத்து 51 ஆயிரம் ரிங்கிட் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட இருவரும் கெட்டமைன் பயன்படுத்தியது முதல் கட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவருக்கு முந்தைய போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவும் உள்ளது.
இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுவதோடு, இரண்டு வாகனங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப் பானங்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு பொழுதுபோக்கு நிலையங்களுக்கு பாட்டில் ஒன்றுக்கு 450 ரிங்கிட் விலையில் விற்க திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.