கோலாலம்பூர், ஏப் 29 – ம.இ.கா தேசிய தலைவர் டான்ஸ்ரீ S.A விக்னேஸ்வரன் ஆதரவில் ஹோ காட் ஆன் மற்றும் தாஸ் மகேஸ்வரி இணையரின் துணையோடு ம.இ.கா ஸ்ரீ தாமான் கிளை , சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் ஏற்பாட்டில் சுங்கை சிப்புட் வட்டாரத்திலுள்ள 8 தமிழ்ப் தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகளும் புத்தகங்களும் அன்பளிப்பும் வழங்கப்பட்டது. சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் தத்துப் பள்ளியான கட்டித்தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 80 பேரும் இந்த உதவிகளை பெற்றவர்களில் அடங்குவர். இந்த நிகழ்ச்சியில் பள்ளிச்சீருடைகள் மட்டுமின்றி சுமார் 8 000 பயிற்சி புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு தமிழ்ப் பள்ளிக்கும் தலா 1,000 ரிங்கிட் நன்கொடையாக வழங்கப்பட்டது.
பள்ளிக்கட்டணம் செலுத்தமுடியாமல் தவிக்கும் சில மாணவர்களுக்கு உதவி தொகையும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் இந்திய இயக்கத்தினருடன் தமிழாசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சுங்கை சிப்புட் இந்திய இயக்கத்தின் உண்மையான நேர்மையான சேவையைத் தான் 18 வருடங்களாகத் கண்டு வந்ததாகவும் என்றுமே தமது முழுமையான ஆதரவு அவர்களுக்கு எப்போதும் இருக்கும் என ஹோ காட் ஆன் தமதுரையில் தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த மற்றும் நன்கொடை வழங்கிய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் சுங்கை சீப்புட் ஶ்ரீ தாமான் ம.இ.கா கிளை உறுப்பினர்களுக்கும் இந்தியர் இயக்க தலைவர் வி. சின்னராஜூ நன்றி தெரிவித்துக் கொண்டார்.