
கன்னியாகுமாரி, செப்டம்பர்-26 – சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட வாழ்க்கையையும் ஆடம்பரத்தையும் அளவுக்கு அதிகமாகப் பகிருவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு, தமிழகத்தின் கன்னியாகுமரியில் நிகழ்ந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த இன்ஸ்டகிராம் பிரபலம் மதுமிதா மற்றும் அவரது கணவர் வினோத் குமார் வீட்டில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மெத்தை முழுவதும் கட்டுக் கட்டாகப் பணத்தை அடுக்குவது, குழந்தையின் மீது பணத்தை வாரி இறைப்பது, தாங்கள் வாங்கும் நகைகள் மற்றும் குடும்பத்துடன் வெளியே செல்லும் தகவல்களை உடனுக்குடன் ரீல்ஸாகப் பதிவிடுவதை மதுமிதா வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், குடும்பத்தினர் வியாழக்கிழமை மாலை ஜவுளிக்கடைக்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டை நவீன இயந்திரம் கொண்டு அறுத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், படுக்கையறை அலமாரியை உடைத்து 118 சவரன் தங்கம், வைர நகைகள் மற்றும் 50,000 ரூபாய் ரொக்கப்பணத்தைச் சுருட்டிக்கொண்டு தப்பியோடினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மதுமிதா குடும்பம் போலீஸில் புகார் செய்ய, குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு CCTV காட்சிகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
சமூக வலைத்தளப் பதிவுகளைக் கண்காணித்தே இந்தக் கொள்ளை அரங்கேறியுள்ளதாகப் போலீஸ் கூறுகிறது .



