Latestமலேசியா

3 மில்லியன் ரிங்கிட் லஞ்சம்: GLC முன்னாள் ஊழியர் ஐந்து நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்

ஷா ஆலாம், நவ12-மத்திய அரசுடன் தொடர்புடைய நிறுவனத்தின் (GLC) முன்னாள் ஊழியர் ஒருவர் ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் துணை மின்நிலையங்களில் 95 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சாலைப் பராமரிப்புத் திட்டங்களைப் பெற்றுத் தருவதற்காக, சுமார் 3 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கோரிப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

40 வயது மதிக்கத்தக்க அந்நபரை நவம்பர் 16ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்க ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதற்காக சிலாங்கூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) அலுவலகத்திற்குச் சென்றிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

2023 முதல் 2025ஆம் ஆண்டு வரை ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் இயக்குநரிடம் இருந்து சந்தேக நபர் லஞ்சம் கோரிப் பெற்றது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகத் தகவல் கூறுகிறது. தீபகற்ப மலேசியா முழுவதிலும் உள்ள துணை மின் நிலையங்களில் சாலைப் பராமரிப்புத் திட்டங்களைப் பெற்றுத் தருவதற்காக அந்த லஞ்சத் தொகை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களை நியமிப்பது தொடர்பான ஆவணங்களைச் சந்தேக நபர் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டுள்ளது. லஞ்சப் பணம் பல்வேறு காசோலைகள் மூலம் பெறப்பட்டு, இடைத்தரகர்களாகச் செயல்பட்ட பல நிறுவனங்கள் வழியாகப் பரிமாறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வேளையில், கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய சிலாங்கூர் மாநில MACC இயக்குநர் Mohd Azwan Ramli, அவ்வழக்கு MACC சட்டம் 2009-இன் பிரிவு 16(a)(B)-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!