ஜோகூர் பாரு, அக்டோபர்-12, வியாழக்கிழமை ஜோகூர் லார்கின் சென்ட்ரல் முனையத்தில் பேருந்தினுள் ஏற்பட்ட சண்டை தொடர்பில் இரு ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.
36 மற்றும் 40 வயதிலான இருவரும் மலாக்கா அலோர் காஜாவிலும், டத்தாரான் லார்கினிலும் வைத்து கைதுச் செய்யப்பட்டதாக, ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
22 வயது பேருந்து ஓட்டுநர் செய்த புகாரின் பேரில் அக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
புகார்தாரரான இளைஞர், மரியாதைக் குறைவாகப் பேசியதால் இரு சந்தேக நபர்களும் ஆத்திரத்தில் அவரை சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர்.
மூவருமே நெருங்கிய உறவினர்கள் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
கைதான இருவரும் ஏற்கனவே குற்றப்பதிவுகளை வைத்துள்ளனர்.
இருவரையும் தடுத்து வைக்க நீதிமன்ற ஆணைப் பெறப்படவிருப்பதாக ரவூப் செலாமாட் மேலும் கூறினார்.
விரைவுப் பேருந்தில், அதன் ஓட்டுநர் வெளியிலிருந்து வந்த 2 ஆடவர்களால் சரமாரியாகத் தாக்கப்படும் வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.