செப்பாங், டிச 26 – இம்மாத தொடக்கத்தில் காய்கறி தோட்டத்தில் வங்காளதேச ஆடவர் ஒருவரை கொலை செய்யதாக இரு ரொஹிங்ய அகதிகள் மீது Sepang மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
22 வயதுடைய ஜமால் உசோன் ( Jamal Husson ) மற்றும் 17 வயதுடைய சிறார் குற்றவாளி மீது கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டில் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
கொலை வழக்கு விசாரணையை செவிமடுக்கும் அதிகாரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு இல்லையென்பதே இதற்கான காரணமாகும்.
குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் கொலை வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி மட்டுமே விசாரிக்க முடியும் .
மேலும் கொலைக்குற்றத்திற்கு 50 வயது குறைந்த ஆடவர்களுக்கு குறைந்தபட்சம் 12 பிரம்படியும் விதிக்கப்படும்.
டிசம்பர் 3ஆம்தேதி விடியற்காலை 4 மணியளவில் Teluk Panglima Garang கிலுள்ள விவசாயத் தோட்டத்தில் சுமோன் (Summon ) என்ற நபரை கொலை செய்ததாக தலைமறைவாக இருந்துவரும் மேலும் இருவருடன் சேர்ந்து ஜமால் உசோனுடன் பதின்ம வயது சிறுவன் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்கள் மீதான குற்றச்சாட்டு ஜனவரி 27 ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் . குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவருக்கு மலாய் மொழி தெரியாது என்பதால் குற்றச்சாட்டை புரிந்துகொள்ளும் வகையில் ஒருவரை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என அவர்களின் வழக்கறிஞரான வினேஸ் (Vinesh) கேட்டுக்கொண்டார்.